புதுவையில் என்.ஆர்.காங்கிரஸும், பா.ஜ.க.வும் கூட்டணி ஆட்சி நடத்திக்கொண்டிருந்தாலும், தொடக்கம் முதலே முதலமைச்சர் ரங்கசாமிக்கும் -பா.ஜ.க.வினருக் கும் இடையே ஒத்துப்போகாத தால் கடந்த நான்கரை ஆண்டு காலமாகவே டாம்&ஜெர்ரி ஆட்டம் ஆடிக்கொண்டிருக் கிறார்கள்.
புதுவை யூனி யன் பிரதேசத்தில் 2026 தேர்தலில் தனித்து ஆட்சியைப் பிடித்து பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் முத லமைச்சர் நாற்காலியில் அமரவேண்டும் என முடிவு செய்தது பா.ஜ.க. தலைமை. இதற்காக அமைச்சரவையில் இருந்து கொண்டே என்.ஆர். காங்கிரஸுக்கு எதிரான வேலைகளை செய்யத் துவங்கியது. சபாநாயகர் செல்வம்,
பா.ஜ.க. எம்.எல்.ஏ ஜான்குமார் மூலமாக என்.ஆர்.காங்கிரஸை விமர்சிக்கச் செய்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் புதுவையில் உள்துறை அமைச்சராக உள்ள பா.ஜ.க. நமச்சிவாயம் போட்டியிட்டு தோல்வியடைந்த பின், களநிலவரம் அறிந்து தனித்து பா.ஜ.க. ஆட்சிக் கனவிலிருந்து வெளியேவந்து யோசித்து ஆட்டத்தை மாற்றி ஆடத்துவங்கினர்.
என்.ஆர்.காங்கிரஸுடன் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்போம், தேர்தல் முடிவுக்கு பின்னர் முதலமைச்சர் நாற்காலியில் பா.ஜ.க. அமரவேண்டும் என முடிவு செய்து, ஊழல் முதலமைச்சர், மதுபான தொழிற்சாலை அனுமதிக்கு லஞ்சம், கோவில் சொத்து கொள்ளை என என்.ஆர்.காங்கிரஸ் மீது தாக்குதல் நடத்தி, மிரட்டத் துவங்கியது பா.ஜ.க. அதோடு, ஐ.எப்.எஸ். அதிகாரி சத்தியமூர்த்தி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வுக்காக வேலை செய்யத் துவங்கினார். அவரை புதுவை பா.ஜ.க. தலைவராக்க ஒரு பெரிய டீமே வேலை செய்தது. அமைச்சர் பதவிக்கு இலவு காத்த கிளியாக இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜான்குமார் மூலமாக, லாட்டரி மார்டின் மகன் சார்லஸை புதுவையில் களமிறக்கியது. "ஜே.சி.எம். மக்கள் மன்றம்' என்கிற பெயரில் புதுவையில் களமிறங்கி நலத் திட்டங்கள் வழங்குகிறேன் எனச்சொல்லி பணத்தை வாரியிறைத்து, ஆளும்கட்சியான என்.ஆர்.காங்கிரஸை கடுமையாக விமர்சித்தவர், மறந்தும் அமைச்சரவையில் உள்ள பா.ஜ.க.வை விமர்சிக்கவில்லை. அவரே, "ஒருமாதத்துக்கு முன்பு லட்சிய ஜனநாயக கட்சியைத் தொடங்கியுள்ளேன், 30 தொகுதியிலும் போட்டியிடப்போகிறோம்'' என அறிவித்துவிட்டு, சிட்டிங் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு பணம் தந்து வளைத்து, "உங்களுக்கு நான் சீட் தருகிறேன், பணமும் தருகிறேன்' எனச்சொல்லி தன்னருகில் வைத்துக் கொண்டார்.
இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமியை பதவியிலிருந்து இறக்குவேன் என பந்தாவாக பேசிவந்த லாட்டரி சார்லஸ் மார்டின், கடந்த பொங்கலின் போது ரங்கசாமியை அவரது அலுவலகத் தில் சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது, இவரை நம்பிவந்த சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள், அரசியல் பிரமுகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஏன்? எதனால் இந்த திடீர் சரண்டர் என விசாரித்தபோது, முதலமைச்சர் நாற்காலியில் ரங்கசாமி அமர்ந்திருந்தாலும் கவர்னர் ஆட்சி செய்வது, தன் கைகள் கட்டிப் போடப்பட்டி ருப்பதும் அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் ரங்கசாமியும் -பா.ஜ.க.வும் கடுமையாக உள்ளுக்குள் மோதிக்கொண்டன. கூட்டணி ஆட்சியை நடத்திக்கொண்டே மறைமுகமாக ஊழல்வாதி என தன்பெயரை டேமேஜ் செய்வது அவருக்கு கோபத்தை உருவாக்கியது. அதேபோல் கவர்னர் கைலாசநாதன், தன் பங்குக்கு முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரி சத்தியமூர்த்திக்கு ஆதரவாக இருந்தார். டெல்லி பா.ஜ.க., சார்லஸுக்கு ஆதரவாக இருந்தது. இவர்களின் செயலால் தேர்தல் நெருக்கத்தில் கூட்டணியை உடைத்து விட்டு தி.மு.க.வோடு கூட்டணி அமைக்கலாம் அல்லது நடிகர் விஜய் கட்சியோடு கூட்டணி அமைக்கலாம் என திட்டமிட்டு மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தினார் ரங்கசாமி. இதனை பா.ஜ.க. உணர்ந்த பின்பே ரங்கசாமியிடம் சரண்டராக முடிவெடுத்து, அவரிடம் பேசியபோது... அவர் பிடி கொடுக்கவில்லை. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஒன்றிய இணையமைச்சர் முருகன் உட்பட பல பா.ஜ.க. தலைகள் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.
அவரோ, அமைச்சர் ஜான்குமார், சார்லஸ் மார்டின், சத்தியமூர்த்தி போன்றவர்களை அடக்கி வைக்கச் சொன்னார். அதற்கு தொடக்கத்தில் பா.ஜ.க. தலைமை தயக்கம் காட்டியது. "நான் சொல்றதை செய்தால்தான் கூட்டணி தொடரும்' என்றார். இதனால் வேறு வழியில்லாமல் பா.ஜ.க. ஓப்புக்கொண்டது. ஜான்குமார் அமைச்சராகி 185 நாட்களைக் கடந்தும் இலாகா இல்லாத அமைச்சராகவே வலம்வரச் செய்துள்ளார் ரங்கசாமி. சதி என ஜான்குமார் புலம்பியும் பா.ஜ.க. அதனை வலியுறுத்தவில்லை.
அதேபோல் பா.ஜ.க.வின் செல்லப்பிள்ளை யும், கவர்னர் கைலாசநாதன் ஆதரித்தவருமான சத்தியமூர்த்தி, இரண்டாயிரம் கோடி ரூபாய் போலிமருந்து விற்பனை விவகாரத்தில் போலிமருந்து கும்பலிடம் 100 கோடி ரூபாய் பணம் வாங்கியதாக முதலமைச்சர் ரங்கசாமி பா.ஜ.க.விடம் சொன்னதும், அவரது மனதை குளிர்விக்க வேண்டும் என சத்தியமூர்த்தியை கைது செய்ய பச்சைக்கொடி காட்ட... கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் சத்தியமூர்த்தி. அதன்பின் சார்லஸ் மார்டினிடம் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் போய் சந்திக்கவேண்டும் என பா.ஜ.க. தலைமை சொல்ல, அதைக்கேட்டு சார்லஸ் அதிர்ச்சியாகிவிட்டார். அவருக்கு வேறு வழியில்லை, அதனால் அவரும் முதலமைச்சர் அலுவலகத்துக்கு சென்று முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார். முன்பு என்.ஆர்.சி.யை எதிர்த்த அளவுக்கு இப்போது அவரிடம் எதிர்ப்பில்லை.
ஆக... ரங்கசாமியை பா.ஜ.க. அடக்கி டம்மியாக்க நினைத்தது. ஆனால் அவரிடம் அடங்கிப்போய்விட்டது பா.ஜ.க. என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
எதிர்கூடாரத்தில் தி.மு.க. வும், காங்கிரஸும் 30 தொகுதி களில் தங்களுக்கு 20 இடங்கள் வேண்டும் என்று அடித்துக் கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சியை எதிர்த்து தொகுதி வாரியாக காங்கிரஸ் நடை பயணம் நடத்திக்கொண்டி ருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/01/27/pondy-2026-01-27-12-37-42.jpg)